Thursday, August 6, 2009

ரமணியண்ணா...

நேத்திக்கு ஆவணி அவிட்டம். வாத்யார் ஸ்வாமி பூணல் போட்டு வச்சு, காண்டரிஷி தர்ப்பணம் பண்ணி வைக்கறச்சே, ரமணி அத்திம்பேர் ஏதோ மாத்தி தப்பாப் பண்ணப்போய், வாத்யார் 'ரமணியண்ணா...'ன்னு மந்திரத்தோட சொல்ல, எனக்குப் பின்னாடி ஒக்காண்டு பண்ணிண்டிருந்தவர் அந்த 'ரமணியண்ணா...'வையும் மந்திரமா சேர்த்துச் சொல்ல பயங்கரக் காமெடி தான். வருஷத்துக்கு ஒரு தடவை ப்ராமணனா இருக்கறதுக்கு சான்ஸ் கொடுக்கற இந்த ஆவணி அவிட்டத்தும்போது சிரிப்பு கூடாது தான். ஆனா, இந்த மாதிரி எது மந்த்ரம், எது மந்த்ரமில்லைன்னு கூட வித்தியாசம் தெரியாதவாளா ஆகிட்டோம். இப்ப கொஞ்சம் சிரிப்ப விட்டுட்டு இதுக்கு யாரெல்லாம் காரணம்ன்னு சீரியசா பார்ப்போம்.


நாம எல்லாரும் நம்ம பாரம்பர்யம், ஆச்சாரம் இதெல்லாத்தையும் விட்டுட்டு ரொம்ப சுயநலவாதிகளா ஆகிண்டு இருக்கறதுதான் முதல் காரணம். ஒரு பத்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆவணி அவிட்டம்னா அக்ரஹாரமே 'ஜே ஜே'ன்னு இருக்கும். இப்ப மெட்ராஸ், பெங்களூர், அமெரிக்கான்னு வேலைதான் முக்கியம்னு எல்லாரும் ஊரைக் காலி பண்ணியாச்சு. யாரக்கேட்டாலும் வேலை வேலைன்னு சொல்லிண்டு வாழ்க்கைய மறந்துண்டு இருக்கோம். அக்ரஹாரத்துல இப்ப இருக்கற பத்து பேரும், ஆவணியாவிட்டம் அன்னிக்கும் வாத்யார் ஸ்வாமிட்ட, "ஒரு எட்டரை அல்லது ஒம்பது மணிக்குள்ள முடிச்சு வச்சுடுங்கோ. ஆபீஸ் போகணும்"னுதான சொல்லறோம். இன்னிக்கு ஒரு நாளாவது லீவ் போட்டு ஒழுங்கா பண்ணலாம்னா, "இல்லை தீபாவளி, பொங்கலுக்கெல்லாம் கூட ஒரு நாள் லீவ் போடணும். இப்ப லீவ் போட்டா, அப்ப போட முடியாது"ன்னு சொல்லுவோம். நம்பளுக்கெல்லாம் பொங்கல், தீபாவளிய விட ஆவணியாவிட்டம் கொறஞ்சு போயிடுத்தில்லியா?


ஸந்த்யாவந்தனத்த விட்டு வருஷக்கணக்காச்சு. நம்ப ப்ராமணன்னு சொல்லிக்கறதுக்கு இன்னமும் ஒரே சாட்சியா இருக்கற பூணல மாத்தற அன்னிக்காவது கொஞ்சம் சிரத்தையா செய்யலாம்லயா? அதக்கூட நம்பளால பண்ண முடியலேன்னா அப்பறம் ஏன் நாம ப்ராமணன்னு சொல்லிக்கணும்? நம்ப மந்த்ரத்தை ஒழுங்காச் சொல்லி, உபாகர்மாவை ஒழுங்கா செய்யணும்னா, அதுக்கு ஆச்சார்யாளும் முக்கியப் பங்கு வகிக்கணும். ஆவணியாவிட்டம் பண்ணி வைக்க வரும்போதே ஒம்போதரைக்குள்ள இங்க முடிச்சிட்டு ராமர் கோயிலுக்குப் போகணும்னு சொல்லிண்டே தான் வர்றார். ஷதாப்தி எக்ஸ்ப்ரஸ விட வேகமா ஓடறார். இப்படிச் சொல்லும்போதே பாதி மந்த்ரம் காதுல விழறதில்லை. காதுல விழற பாதி மந்த்ரத்தையும் நம்பளால ஒழுங்கா சொல்ல முடியறதில்லை (அவர் தான் ஷதாப்தி வேகத்துல ஓடிண்டு இருக்காறே?) வாத்யார் ஸ்வாமியையோ, குருவையோ அவமதிக்கணும்கற எண்ணம் எனக்கு நிச்சயமாக் கிடையாது. இப்படி ஒரு நிலைமை இருக்கறதுக்கும் நாம தான் காரணம். பின்ன, நம்ப கொடுக்கற பத்தையும் பதினஞ்சையும் வாங்கிண்டு அவர் குடும்பத்த நடத்த முடியுமா? ஒடம்புக்கு அடிச்சுக்கற Axe பாடி ஸ்ப்ரேக்கு மாசத்துக்கு நூத்தம்பத தாராளமா செலவழிக்கற நாம, வருஷத்துக்கு ஒரு நூறு ரூபா வாத்யாருக்குக் கொடுத்தோம்னா கொறஞ்சு போயிடுவோம்லியா? நம்ப பத்தையும் பதினஞ்சையும் கொடுத்துண்டு இருந்தோம்னா அவரும் எட்டரைக்கு பெருமாள் கோவில், ஒம்போதரைக்கு ராமர் கோவில்னு ஓடத்தான் செய்வார். அவரைக் குறை சொல்லறதுல்ல அர்த்தம் இல்ல.

அப்பறம், நமக்கும் வேதத்துக்கும் ரொம்ப தூரம். அதுக்கு காரணம் என்னன்னா, வேத மந்த்ரத்தையும், உபநிஷதத்தையும் படிச்சு புரிஞ்சுக்கணும்னா அதுக்கு ஸமஸ்க்ருதம் அவசியம். நம்பளுக்கு தமிழே சரியா வராது; ஏதோ, கம்ப்யூட்டர் புண்ணியத்துல இங்கிலீஷ் மட்டும் தெரிஞ்சிருக்கு. ஸமஸ்க்ருதமே தெரியாம வேதத்தப் படின்னா எப்படி? ஆக மொத்தம், நம்பளால சரியா வாசிக்கவும் முடியாது, மந்த்ரத்தைச் சொன்னாக்கூட சரியா திருப்பி சொல்ல நம்பளால முடியாது. எங்கே ப்ராமணன்ல சோ சொன்ன மாதிரி, பூணல் போட்டுக்கறவாள்ளாம் ப்ராமணாளா ஆக முடியாது. ஆனா, போற போக்கப் பாத்தா, பூணல் போட்டுக்கறது கூட நமக்கெல்லாம் கஷ்டமாயிடும் போல. ப்ராமணனா இருக்கறதுங்கறது அவ்வளவு சுலபமில்லைதான். அதுக்கு ஆச்சாரத்தைக் கடைபிடிக்கணும் - ஆச்சாரத்தையெல்லாம் கடை பிடிக்கணும்கறது ரொம்பக் கஷ்டம்தான். ஆனா, அந்தக் கஷ்டம் தான், நம்ப வாழ்க்கைய நெறிப்படுத்தறது.


ஏழெட்டு வயசுல கொழந்தேள் இருக்கற பெற்றோர்க்கெல்லாம் ஒரு வேண்டுகோள்: மொதல்ல, அவாளுக்குப் பூணல் போடறதுக்கு முன்னாடி அவாள ஸமஸ்க்ருத்தத்த படிக்க வைங்கோ. இங்கிலீஷ், தமிழ் இதெல்லாம் நாம அன்றாடம் பேசறதுதான். ஆனா, ஸமஸ்க்ருதம்ங்கறது அப்படியில்லை. ஸமஸ்க்ருதத்தப் படிக்க வச்சாச்சுன்னா, நாம பண்ணற ஸந்த்யாவந்தனம், சொல்லற புருஷஸூக்தம் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிக்கும். அவாளுக்கும், நம்ப கலாச்சாரத்து மேல கொஞ்சம் ஆர்வம் பிறக்கும். நாம செய்யற எல்லாத்துக்குமே காரணம் இருக்குன்னும் புரியும். அப்படிப் புரியாத வரைக்கும், 'ரமணியண்ணா', 'மூர்த்தி மாமா' இவாள்ளாம் ஆவணியாவிட்ட மந்த்ரத்துல வந்துண்டுதான் இருப்பா.


Copyright © 2009 All rights reserved.