Friday, April 17, 2009

அன்புள்ள வெட்டிப்பயல் சாருக்கு

அன்புள்ள வெட்டிப்பயல் சாருக்கு,

உங்களோட ரெண்டு வருஷத்துத்துக்கு முந்தின வலைப்பதிவப் படிச்சேன்! (ஆமாம்... கொஞ்சம் லேட்டாயிடிச்சு - இப்போ எலெக்க்ஷன் டைம்ங்கறதுன்னால ஈமெயில்ல உலா வந்துக்கிட்டிருக்க்கு). மணிரத்னம் சாரோட ரோஜா, பம்பாய், ஷங்கர் சாரோட முதல்வன் அப்பறம்... இந்த ஸ்வதேஸ், சக் தே, லகான் இதெல்லாம் பார்த்த ஃபீலிங்ஸ் கெடச்சுது. ரொம்ப தேங்க்ஸ்! அமெரிக்காங்கற அழகான நாட்டுல டெய்லி ஆப்பிள் பழங்கள் சாப்பிட்டுட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா வாழ்க்கைய அனுபவிச்சுட்டு இருக்குற நீங்க இந்தியாவப் பத்தியும் கவலைப்பட்டு எழுதியிருக்குற பதிவப் படிச்சுட்டு எனக்கு ரொம்பவே புல்லரிச்சிருச்சு.

வெட்டிப்பயல் சார்! இந்த நாட்டுக்கும் நீங்க இப்போ இருக்கற நாட்டுக்கும் நெறைய்ய வித்தியாசம் இருக்கு. இங்க ஒரு வேள சோத்துக்கும், ஒரு கோவணத்துக்கும் வழியில்லாம நெறைய்ய பேரு இருக்காங்க. இதெல்லாம் உங்களுக்கும் தெரியுமுன்னு எனக்கும் தெரியும். ஆனா இத ஏன் இங்க சொல்லறேன்னா இப்படி அடிப்படை வாழ்க்கைக்கே கஷ்டப்படறவங்க இருக்குற நாட்ட ஆளுறவங்க எப்படி இருக்கணும்? சரி - நாட்டுக்காக ஒண்ணும் செய்ய வேண்டாம். அவங்கள நம்பி ஓட்டுப் போட்டவங்களுக்காவது ஏதாவது கொஞ்சமாச்சும் செய்யலாமுல்ல? தினசரி சாப்பாடு போட வேண்டாம்... அட்லீஸ்ட் ஒரு வேள சாப்பாடு கெடைக்கிற மாதிரி நல்ல வேலைவாய்ப்ப ஏற்படுத்தலாமுல்ல?

ஒவ்வொரு எம்.பியும் எம்.எல்.ஏவும் கோடி கோடியா வச்சுருக்கற சொத்தப் பாத்தா வயிறு எரியுது சார். ஒரு நாளைக்கு காலையில ஏழு மணிக்கு வீட்ட விட்டுக் கிளம்பினா ராத்திரி ஒம்போது மணி வரைக்கும் கஷ்டப்பட்டு வேல செஞ்சு சம்பாதிச்ச பணத்துக்கு கட்டின வரி சார் இது. இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம் இன்னொருத்தன் - அதுவும் ஒண்ணுமே செய்யாம எம்.பி, எம்.எல்.ஏன்னு சொல்லிட்டு இருக்கறவனோட பாங்க் அக்கவுன்ட்டுல டெபாசிட்டாவும் அவன் பொண்டாட்டி புள்ளைங்க கழுத்துலயும் காதுலயும் வைரமாவும் ஜொலிக்கறத பாத்தப்புறம் எப்படி சார் இந்த நாட்ட நேசிக்கத் தோணும்?

அப்புறம் என்ன சொன்னீங்க? கீழ கெடக்குற குப்பைய எடுத்து குப்பைத்தொட்டில போட மாட்டோமா? சார், நானும் பஸ்ஸுல போறப்ப வாங்குற டிக்கெட்டக்கூட கீழ போடக்கூடாது, குப்பைத் தொட்டியப் பாத்தாப் போட்டுடலாமுன்னு அதுவரைக்கும் சட்டைப்பையையே குப்பைத்தொட்டியாக்கி அதுல போடற ஆள்தான் சார். பெங்களூருக்கு வந்து பாருங்க சார்! எங்கயாச்சும் குப்பைத்தொட்டிய பாத்தா சொல்லுங்க - நான் இனிமே அங்க போயி போட்டுடறேன். சரி, அத விடுங்க! நாம ஓட்டுப்போட்டு கவுன்சிலரா ஆக்கின ஆளுகிட்டப் போயி இதப் பத்தி சொல்லலாமுன்னா அந்த ஆள எலக்க்ஷனுக்கு அப்புறம் பாக்கவே முடியறதுல்ல. அப்படிப் பாத்தாலும் அவன் சொல்லற பதில் - வீட்டு வாசலுக்கே வந்து குப்பைய கலெக்ட் பண்ண ஆள் வருதுங்கறான். ஆமாம் அவன் சொல்லறது உண்மைதான் - ஒரு எட்டு மணிக்கு குப்பையள்ள விசிலடிச்சிகிட்டு வர்றாங்க. ஏழு மணிக்கே ஆபீஸ் போற நான் எங்க சார் குப்பையப் போடறது? அவங்கள நான் குறை சொல்லமாட்டேன். தெருவோரமா ஒரு குப்பைத்தொட்டிய வைக்கலாமுன்னு தான் சொல்லறேன்.

சனி, ஞாயிறு வந்தா தூங்கறோம், ஷாப்பிங் போறோமுன்னு தான சொல்லுறீங்க? ஒரு வாரம் தூங்காத தூக்கம், துவைக்காத துணி இதெல்லாத்துக்கும் இந்த ரெண்டு நாள் தான். நம்மள கவனிக்கறத்துக்கு தான் சார் சனி, ஞாயிறு... நாட்ட கவனிக்கறதுக்கு தான் நாம ஓட்டுப் போட்டு எம்.எல்.ஏ., எம்.பின்னு ஒக்கார வச்சுருக்கோம். அவன் நாட்ட கவனிக்காம தன்னோட பாக்கெட்ட எப்படி நிரப்பலாமுன்னு பாத்தான்னா அது இந்த நாட்டோட சாபக்கேடு. அதுக்காக அமெரிக்கால இருக்குற நீங்க எங்கள குறை சொல்லுறது கொஞ்சம் கூட சரியில்ல வெட்டிப்பயல் சார். ஓட்டுப் போடணும் ஓட்டுப் போடணும்ணு சொல்லறீங்க... பெங்களுர்லேந்து என்னோட ஊருக்கு (உங்க ஊரும்தான்) ஓட்டுப் போடப் போலாமுன்னா அதுக்கு இருக்குற ஒரே ரயில்ல டிக்கெட் இல்ல சார். அப்படியே தத்கல்ல புக் பண்ணியோ, பஸ்ஸுல போயோ வோட்டுப் போடலாமுன்னா எல்லாமே ஊழல் பேர்வழியா இருக்கும் போது யாருக்கு தான் சார் போட? அப்படியே சுயேச்சையா ஒருத்தன் நின்னு அவன ஜெயிக்க வச்சாலும் எலெக்க்ஷனுக்கு அப்புறம் நடக்குற குதிரைபேரத்துல அவனும் விலை போயிடறான் சார்!

இந்தியாவோட முதுகெலும்பு கிராமம் சார். அங்க இருக்குறவங்க பண்ணுற விவசாயம்தான் நம்மள இன்னும் உசிரோட வச்சிருக்கு. அத விட்டுட்டு பில் கேட்ஸ், ஜான் சேம்பர்ஸ் இவங்கள்ளாம் இந்தியாவுக்கு வந்துட்டா அவங்க கூட ஒட்டிக்கிட்டு போட்டோவுக்கு போஸ் குடுத்துட்டு இந்தியாவ மென்பொருள் மையமா மாத்தி வளர்ச்சி காணப் போறோம்னு சொல்லறதுல்லாம் ரொம்ப சகஜமாயிடுச்சு. நீங்க மனசுல என்ன நெனக்கறீங்கன்னு புரியுது... 'நீயும் விவசாயம் பண்ணப் போயிருக்கவேண்டியது தானே'ன்னு தான கேக்குறீங்க? போலாம் சார்... இந்த நாட்டுல விக்கற பொருள வாங்குற அளவுக்கு வருமானம் கெடைச்சா கண்டிப்பா போலாம் சார். வரி வரின்னு நம்மளல்லாம் அரிச்சு தன்னோட சொத்த அதிகரிக்குறவங்க இருக்கறப்போ இதெல்லாம் எப்படி சார் நடக்கும்? இன்னொண்ணு தெரிஞ்சுக்கோங்க வெட்டிப்பயல் சார் - மதச்சார்பின்மையப் பத்தி வாய்கிழியப் பேசுவாங்க, ஆனா, ஓட்டுக்காக அந்த மதத்துக்கு 30% இந்த ஜாதிக்கு 29%னு இட ஒதுக்கீடு மட்டும் பண்ணிடுவாங்க! சார் தெரியாமத்தான் ஒண்ணு கேக்குறேன் - நான் வேற ஜாதிங்கறதுனால எனக்கு கடவுள் ஒண்ணும் அஞ்சு கிலோ மூளைய வைக்கல. எனக்கும் எல்லார மாதிரியும் 1.36 கிலோ தான் மூளையோட வெயிட். என்னைய விட கொறஞ்ச மார்க் எடுத்தவங்களுக்கெல்லாம் ரிசர்வேஷங்கற பேர்ல நல்ல காலேஜுல்ல ஸீட் கொடுக்கறது எந்த விதத்துல நியாயம் சார்? ஏதோ ஆண்டவன் புண்ணியத்துலயும் எங்க அப்பா அம்மா பண்ணின புண்ணியத்துலயும் 'Who moved my cheese?'ல சொன்ன மாதிரி கஷ்டப்பட்டுப் படிச்சு முன்னேறுறோம் சார்! (அதையும் கெடுக்க ப்ரைவேட் கம்பெனிலயும் ரிசர்வேஷன்னு ஒரு கோமாளித்தனத்தக் கொண்டு வரப் போறாங்களாம்).

இந்த நாட்டு மேல எனக்கு எந்த கோபமும் இல்ல சார். இந்த நாட்ட முன்னேத்துங்கடான்னு நம்பி ஓட்டுப் போடறோமே அவங்க மேலதான் சார் என்னோட கோபமெல்லாம். இவங்களால பல பிரச்சினைங்க! பாருக்குள்ளே நல்ல நாடுன்னு பாரதியார் பாடின நாடு சார் இது. இப்பக் குட்டிச்சுவராக்கிட்டாங்க! இவங்களாலேயே நாம தப்பான நாட்டுல பொறந்துட்டோமோன்னு யோசிக்க வேண்டி இருக்குது சார். புராணத்துலயும், வேதத்துலயும் பரதக்கண்டம்னு சொல்லப்பட்டுருக்கற நாடு சார் இது. இப்போ இந்த பாரதத்துக்கு உண்டாகியிருக்கற கண்டம் எப்படா முடிவுக்கு வரும்னு ஆயிடுச்சு. அட்லீஸ்ட், அடுத்த பொறப்புலயாவது நாட்டப் பத்தி, நாட்டு மக்களப்பத்தி யோசிக்கற அரசியல்வாதிங்க இருக்கற இந்தியாவுல பொறக்கணும்னு கடவுள வேண்டிக்கறேன் சார்.

நாடுன்னா மக்கள் தான்! மக்கள்ன்னா வேற யாரும் இல்ல நாம தான்... அப்ப நாட்ட ஆளுறோங்கற பேர்ல மக்கள கொள்ளையடிக்கிற கும்பல என்ன சார் சொல்ல?

நீங்க எழுதுன பதிவு மத்தவங்களுக்காகவும் உங்களுக்காகவும்னு சொன்னீங்க இல்லையா? நான் எழுதியிருக்கறது உங்களுக்கு பதில்னாலும், நான் நொந்துக்கறதுக்காக மட்டும்தான் சார் எழுதியிருக்கேன்.

அமெரிக்கால இருக்கற நீங்க இந்தியாவப்பத்திக் கவலைப்பட்டு உங்க ஒடம்ப கெடுத்துக்காதீங்க வெட்டிப்பயல் சார்.

இப்படிக்கு,
நாட்டைப் பத்தி இனிமேல் அதிகம் கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ள விரும்பாத இந்திய நாட்டுக் குடிமகன்.