நம்ம நாட்டுல ஆதிகாலத்துலேந்தே சிவன் பெரியவரா, நாராயணன் பெரியவரான்னு வாதம் உண்டு (இப்போ கொறஞ்சிருக்கோ?). பொன்னியின் செல்வன் படிக்கும் போது அதைப் பத்தின நெறைய்ய உதாரணம் கிடைச்சுது. ப்ரம்மாவும், நாராயணனும் சிவனோட முடியையும் அடியையும் கண்டுபிடிக்க முடியாததுனால சிவனே பெரியவர்னு ஒருத்தர் வாதாட, இன்னொருத்தரோ, வாமன அவதாரம் எடுத்து மூணு உலகத்தையும் அளந்த நாராயணனே பெரியவர்ங்கறார். இதெல்லாம் படிக்கும்போது எனக்கு ஒரு தேவாரப் பாடலும், திவ்யப் ப்ரபந்த பாசுரமும் ஞாபகத்துக்கு வந்தது. நாவுக்கரசரும், தொண்டரடிப் பொடியாழ்வாரும் சொல்லிருக்கற பாடல்லயும் பாசுரத்துலயும் எவ்வளவு கருத்து ஒற்றுமை இருக்குன்னு பாருங்கோ!
குனித்தபுருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ்சிரிப்பும்
பனித்தசடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்தமுட னெடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே.
- திருநாவுக்கரசர்
பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவைத் தவிர யான்போய் இந்திர லோகமாளும்
அச்சுவைப் பெறினும் வேண்டேன் அரங்கன்மா நகருளானே.
- தொண்டரடிப்பொடியாழ்வார்
ஒருத்தருக்கு பகவானோட மேனி பச்சைமாமலை போல இருக்கு, இன்னொருத்தருக்கோ பவளம் போல தோணறது. வாய் ஒருத்தருக்கு பவளம் மாதிரி காட்சி அளிக்கறதுன்னா இன்னொருத்தருக்கோ கோவைப் பழம் மாதிரி இருக்கு. ஆனாலும், ரெண்டு பேரோட கருத்து என்னன்னு பாத்தா, ரெண்டுமே கிட்டத்தட்ட ஒண்ணுதான். நாவுக்கரசர் இப்படி அழகான பகவான பார்த்துண்டே இருக்கலாம்னா இந்த மனுஷ பிறவியையும் விரும்பலாம்கறார். தொண்டரடிப்பொடியாழ்வாரும் தனக்கு இந்திரலோகத்த ஆளக்கூடிய பதவி வந்தாக்கூட, இப்படிப்பட்ட அழகான பகவான தரிசிக்கறதக்காட்டிலும் அது பெருசே இல்லங்கறார். ஆனா, நாம இதெல்லாம் மறந்து இன்னமும் சைவம் பெருசா, வைஷ்ணவம் பெருசான்னு சண்டை போட்டுண்டிருக்கோம்! இப்போவாவது நம்மளுக்குப் புரியுமா - அரியும் சிவனும் ஒண்ணு அறியாதார் வாயில மண்ணுன்னு?
No comments:
Post a Comment