Tuesday, February 26, 2008

அந்த நாளும் வந்திடாதோ…

ரொம்ப நாளா என்னொரு ஆசை. ஏன் கனவு காணறேன்னு கூட சொல்லலாம். பாமரனும் கம்ப்யூட்டர் உபயோகிக்கற காலம் ஒண்ணு வரணும். நம்ம நாடு இப்ப இருக்கற நிலைமைல அவ்வளவு பேருக்கும் அடிப்படைக் கல்வியறிவு கொண்டு வர்றதே பெரிய விஷயம். அப்படி அடிப்படைக் கல்வியறிவு கொண்டுவந்துட்டாக் கூட கணிப்பொறி-ங்கறது அவங்க கல்வியறிவை விட உயரத்துலதான் இருக்கும். இப்ப செல்பேசி-ங்கறது விவசாயிட்டக் கூட இருக்கற மாதிரி கம்ப்யூட்டரும் கிராம மக்கள்ட்ட இருக்கணும்னா அதோட உபயோகம் அவங்களோட வாழ்க்கையோட பின்னப்படணும்.


இன்னிக்கு ஆங்கிலம் தெரியாத யாருக்கும் கணிப்பொறி உபயோகமில்லாத நிலைமை இருக்கு. இப்பதான் கொஞ்ச வருஷமா யூனிகோடே (unicode) பயன்பட ஆரம்பிச்சுருக்கு. அதனால நான் கனவு காணற மாதிரி ஒரு வருங்காலம் இருக்கணும்னா கணிப்பொறியோட பயன்பாடு மொழிக்கு அப்பாற்பட்டு அமையணும். கீபோர்ட், மௌஸ் இதுக்கெல்லாம் தேவையே இருக்கக் கூடாது. நான் என்னோட நண்பன்கிட்ட பேசற மாதிரி கணிப்பொறிட்ட பேசணும்; எனக்கு என்ன தேவைன்னு நான் சொல்ல கணிப்பொறி அதை புரிஞ்சுண்டு அதுக்கு ஏத்த மாதிரி வெளியீடு (output) தரணும் - அதுவும் எனக்குப் புரியற மொழியிலேயே.


அதுக்கு இயல் மொழியாக்கம் (Natural Language Processing-NLP) அவசியம். அது இல்லாம இந்தக் கனவு பலிக்காது. இந்த இயல் மொழியாக்கம்-ங்கறது கணிப்பொறிய மனுஷனாக்கற ஒரு திட்டம் தான். அதாவது கிட்டதட்ட நாம பிரம்மாவாகி ஒரு மனுஷன் எப்படி இன்னொரு மனுஷன் சொல்றத இயல்பா புரிஞ்சுக்கறானோ, அதே மாதிரி ஒரு கணிப்பொறிய உருவாக்கணும்.

உதாரணத்துக்கு, ஒரு விவசாயி தன்னோட பயிர்ல ஒரு நோய் இருக்கறதப் பார்க்கிறான். உடனே, தன்னோட கணிப்பொறிய எடுத்து, "கூகிள், என்னோட பயிர் இலைல இந்த மாதிரி ஒரு நோய் இருக்கு"ன்னு சொல்ல - உடனே கூகிள் "எந்த மாதிரி"ன்னு கேக்க - விவசாயி கணிப்பொறியில இருக்கற ஒளிப்படக்கருவி (camera) மூலமா நோய் பாதிச்ச செடிய படம் எடுத்து அனுப்ப - கூகிள் உடனே அந்தப் படத்த பகிர்வில (server) இருக்கற பல படங்களோட ஒப்பிட்டு என்ன நோய்னு கண்டுபிடிச்சு அதை குணப்படுத்தற வழிமுறையையும் மருந்தையும் விவசாயியோட மொழியிலேயே சொல்லணும்.


இந்த உதாரணம் கேக்கறதுக்கு 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' வர்ற 'அண்டாகாகசம் அபூகாகுசம் திறந்திடு சீசே!" ரேஞ்சுக்கு தான் இருக்கும் இப்ப.

மேல சொன்னது ஒரு உதாரணம்தான்னாலும் நடைமுறைல இதை சாத்தியமாக்கறது கஷ்டமான வேலைதான்.


பின்ன, கம்ப்யூட்டரை மனுஷனாக்கணும்னா நாம கடவுளாகணுமே... கடவுளாகறது என்ன அவ்வளவு சுலபமா என்ன?


அம்பது வருஷத்துக்கு முன்னால யாராவது நெனச்சுருப்பாங்களா - அவனவன் 'வாழைக்காய் பஜ்ஜி' மாதிரி கையில ஒரு செல்பேசிய வச்சுண்டு அலைவான்னு? அத மாதிரி இந்தக் கனவும் நனவாகும் - என்ன இன்னும் அம்பது அல்லது நூறு வருஷம் கூட ஆகலாம் அது நனவாக. அதுவரைக்கும் எம்.எஸ். மீராவுல பாடின மாதிரி 'பாமரனும் கணிப்பொறி உபயோகிக்கும் அந்த நாளும் வந்திடாதோ!"ன்னு பாடி அத நனவாக்கறதுக்கு நம்மாலான முயற்சியை மேற்கொள்வோம்.

2 comments:

ஜி said...

:)))

வா மக்கா... தமிழ் பதிவுலகத்துக்கு....

Sankaranarayanan Venkatasubramanian said...

வந்தோம்! வரவேற்புக்கு நன்றி!