Sunday, March 15, 2009

ஸ்ரீமத் பாகவதம்


மேலும் விபரங்களுக்கு இங்கு க்ளிக் செய்யவும்.

இக்காலத்து இளைய தலைமுறையினரிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகின்றது. இணையத்திலேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கின்றனர். சிலருக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருப்பினும் நம் தமிழ் மொழியின் பெரும் படைப்புக்களோ, நம் பாரத தேசத்துப் பெருங்காவியங்களான மஹாபாரதமோ, ராமாயணமோ அவர்கள் விரும்பும் பட்டியலில் இல்லை. அவர்கள் விரும்புவதெல்லாம்
ஹேரி பாட்டர், ஷிட்னீ ஷெல்டன் போன்றவை தான். ஆனால், இளைய தலைமுறையினரும் விரும்பும் வகையில் அமைந்துள்ளது இந்தப் புத்தகம்.

உமா சம்பத்-ன் ஸ்ரீமத் பாகவதம்: முன் அட்டையில் கஜேந்திர மோக்ஷக் காட்சி. பின் பக்கம் திருப்பினால் கண்ணில் தென்படும் வரிகள் - "பகவான் விஷ்ணுவின் பெருமைக் காவியம்! காட்டாற்று வெள்ளமெனப் பொங்கும் மொழியில்!" உண்மைதான்! புத்தகத்தைத் திறந்தால் பொங்கிப் பாய்கின்றது வெள்ளம் - பாய்வது சாதாரணமான வெள்ளமில்லை; பக்தி அருட்பெருவெள்ளம். நம் மனதில் உள்ள அழுக்கை நீக்கி, பாவங்களைப் போக்கிடப் பாய்கின்றது 'பாகவதம்' என்னும் விஷ்ணுவின் அவதார மகிமைகளைக் கூறும் வெள்ளம்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் அருளால் உத்தரையின் கர்ப்பத்தில் அசுவத்தாமாவின் பாணத்திலிருந்து காக்கப் பெற்ற பரீக்ஷித், நொடிப்பொழுதில் இழைத்த தவறால் முனிகுமாரனிடம் சாபம் பெறுகிறான். அதை மனதார ஏற்றுக்கொண்டு தான் முக்தி பெறும் பொருட்டு வனவாசம் சென்றவிடத்தில் சுகர் மகரிஷியிடம் பகவானின் பெருமைகளைக் கூறுமாறு வேண்டுகிறான். சுகர் முனிவரும் பெருமகிழ்ச்சி கொண்டு அவனுக்கு தன் தந்தை இயற்றிய பாகவதத்தை எடுத்துரைக்கின்றார்.

இரண்டே பாகங்களில், பாகத்திற்குப் பதினாறே கதைகளில் பாகவதத்தை மிக அழகுற விவரிக்கும் உமா சம்பத் அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. முதல் பாகம் மச்சம் முதல் ராமர் வரையான பகவானின் அவதாரப் பெருமைகளைக் கூறுகின்றதென்றால், அந்த மணிவண்ணணான ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தை இரண்டாவது பாகத்தில் உமா விவரித்ததுள்ள விதமே பக்தியில் நம்மை மெய்மறக்கச் செய்கின்றது.

மஹா பிரளயத்திலிருந்து தொடங்குகின்றது இந்த பாகவதம். சனத்குமாரர்கள் பகவானை தரிசிக்கச் சென்றபோது அவர்களை அவமதித்த த்வாரபாலகர்களே இரண்யாட்சன், இரண்யகசிபுவாகப் பிறக்கின்றனர். பூமாதேவியைப் பதுக்க முயற்சித்த இரண்யாட்சனை வதம் செய்ய வராகமூர்த்தியாகிறார் பகவான். இரண்யனை வதைத்து பூமியைக் காக்கிறார். தந்தையின் மடியில் உட்காரச் சிறு இடம் கேட்ட துருவன் அது கிடைக்காமல் போகவே விஷ்ணுவை நோக்கிச் செய்த தவம் விண்ணுலகில் எவருக்குமே கிட்டாத பதவியைப் பெற்றுத்தருகிறது. நம்பிக்கையுடன் இறைவனைத் துதித்தால் எதுவும் கைகூடும் என்பதற்கு இதைவிடவும் வேண்டுமோ சான்று? ப்ருதுவின் மகளானதாலேயே பூமிக்கு 'ப்ருத்வி' என்ற பெயர்க் காரணம் என்பதைப் படிக்கும்போது, உமா சிறு விஷயங்களில் கூட செலுத்தியுள்ள கவனம் நமக்குப் புரிகின்றது.

பக்தப் ப்ரகலாதனின் கதையை எத்தனை முறைக் கேட்டிருப்போம்? 'தூணிலும், துரும்பிலும் எதிலும் எங்கும் எப்போதும் இருப்பான் நாராயணன்' என்னும் உண்மையை உமா விவரித்துள்ள விதமே சிறப்பாக இருக்கிறது. மச்சாவதாரம், துன்பம் வரும் நேரத்தில் நல்லவர்களைக் காக்க பகவான் எப்படியும் வருவார் என்பதை விளக்குகிறதென்றால், கூர்மாவதாரமோ, பகவான் நமக்கு உதவ சரியான வடிவத்தில் வந்து உதவுவார் என்றறியச் செய்கிறது. மூன்றடி மண் கேட்டு வாமனன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்ற பெருமாளின் லீலை உமாவின் வார்த்தைகளில் தித்திக்கின்றது. பரசுராமர் கதையைப் படிக்கும்போது 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்னும் தத்துவத்தின் அருமை புரிகின்றது. ராமன் மக்கள் மனத்திலே இடம் பிடித்துவிட்டதாலோ என்னவோ ராமாவதாரம் மட்டும் சில பக்கங்களிலேயே இடம் பெற்றுள்ளது.


ஏழு அவதாராங்களைப் பற்றி சொல்லிமுடித்த சுகர் மகரிஷி, கிருஷ்ணனைப் பற்றி சொல்லத் தொடங்குகிறார். 'ஸ்ரீகிருஷ்ணன் பரிபூர்ண அவதாரம்! அவதரிக்கும் போதே, தான் கடவுள் என்று அனைவரும் உணரும்படியாகப் பிறந்தவன்' என்று தொடங்குகிறது கிருஷ்ணாவதார மகிமை. பூமாதேவியின் பாரத்தைக் குறைக்கவே பிறந்தவன் அவன் என்ற தகவல் நமக்கு வியப்பைத் தருகின்றது. இரண்டாம் பாகம் முழுவதையும் கிருஷ்ண பகவான் ஆள்கிறார். வசுதேவர்-தேவகி திருமணத்திலேயே கம்சன் அவர்களது எட்டாவது குழந்தையால் கொல்லப்படுவான் என்ற அசரீரி ஒலிக்கின்றது. கலக்கமடையும் கம்சன் அவர்களுக்குப் ஆறு குழந்தைகளையும் கொல்கின்றான். பகவான் அவன் கண்ணில் மண்ணைத்தூவி ஏழாவது கர்ப்பமான ஆதிஷேஷனை வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோஹிணியின் வயிற்றிலும், தன் யோகமாயாவை நந்தகோபரின் மனைவியான யஷோதாவின் வயிற்றிலும் வளரச் செய்கிறார். பகவான் இப்படிச் செய்ததற்குக் காரணம்? முந்தைய பிறவியில் வசுதேவருக்கும் தேவகிக்கும் மகனாகப் பிறப்பேன் என்று அளித்த வரம். திரும்பவும் ஒரு முறை கம்சன் கண்ணில் மண்ணைத்தூவி பிறந்த இரவே யஷோதையின் மகனாக மாறுகின்றார். கிருஷ்ணனை பெறாவிடிலும் வளர்த்ததனாலேயே யஷோதைக்கு தேவகியைக் காட்டிலும் மகத்துவம் அதிகம்.

பிறந்த உடனே தொடங்குகின்றது அசுரவதம். உயிர் பயத்தினால் பிறந்த குழந்தைகளையெல்லாம் கொல்ல உத்தரவிட்டிருந்தான் கம்சன். அவன் கண்ணில் பட்டனர் பகவானும் பலராமனும். கம்சனால் அனுப்பப்பட்ட பூதனை, சகடாசுரன், த்ருணாவர்த்தன் என தன்னைக் கொல்ல வந்த அரக்கர் ஒவ்வொருவரையும் பந்தாடுகிறான் பரந்தாமன். கண்ணன் என்றாலே நம் மனதுக்கு முதலில் வருவது வெண்ணையும் உரலும் தான். அவன் பண்ணிய சேஷ்டைகளைக் 'கொஞ்சம் குறும்பு, கொஞ்சம் விஷமம்' என்று உமா எடுத்துரைத்துள்ள விதமே அழகு. வெண்ணையைத் திருடித் தின்ற கண்ணனைக் கண்டிக்கும் யஷோதையிடம் தான் திருடவே இல்லை என்று உரைக்கும் கண்ணனை நம் கண்முன் நிறுத்துகின்றார் உமா. மண்ணைத் தின்ற கண்ணனைக் கண்டிக்கும் யஷோதைக்கு தன் வாய்க்குள் பிரபஞ்சத்தையே காட்டுகிறான். கண்ணன் தொல்லை தாங்க முடியாமல் போன யஷோதை அவனை உரலில் கட்டிப் போடுகின்றாள். அப்போதும் மாயக்கண்ணன் மரங்களாய் நின்றிருந்த தேவர்களுக்கு சாப விமோசனம் தருகின்றான். குழந்தைகளுக்குத் தொடர்ந்து வரும் துன்பம் தெரிந்து யாதவர்கள் அனைவரும் பிருந்தாவனத்தில் குடியேறுகின்றனர். அப்போதும் தன்னை அழிக்க வந்த அசுரர்களையெல்லாம் வதம் செய்கின்றார் பகவான். காளிங்க நர்த்தனமாடி தேவர்களை மகிழ்விக்கிறார். இப்படிக் குழந்தைப் பருவத்திலேயே கண்ணன் நடத்திய மாயைகளை நமக்கு ஆனந்தமூட்டும் வகையில் விவரித்துள்ளார் உமா.

பாலகன் கிருஷ்ணன் வாலிபனாக வளர்ந்துவிட்டிருந்தான். அதுமட்டுமா? பிருந்தாவன கோபியர்கள் அவனிடம் கொண்டிருந்த அன்பும் காதலாக வளர்ந்துவிட்டிருந்தது. கண்ணனின் வேணுகானத்திலேயே தங்கள் காதல் மிகுதியடைய அவஸ்தையில் தவிக்கின்றனர் கோபியர். அனைவரும் கண்ணனே தன் கணவனாக வர வேண்டும் என்று காத்யாயனி விரதம் இருந்தனர். மீண்டும் கண்ணன் ஒரு உண்மையை உலகுக்கு உணர்த்த லீலை புரிகின்றான். விரதமிருக்கும் கோபியர்கள் சாஸ்த்திரத்தை மறந்து ஆடையில்லாமல் நதியில் நீராடுகின்றனர். அவர்களின் தவறைப் புரிய வைக்க அவர்களின் ஆடைகளை எடுத்துக் கொள்கிறான் கண்ணன். விரதம் கைகூட வேன்டுமானால் தன்னைச் சரணடைந்து ஆடைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறுகிறான். மனம் காமத்தை வெண்று பரமானந்தத்தை அடைய கிருஷ்ணன் செய்த லீலை இது.

கோவர்த்தன மலையைத் தன் சுட்டு விரலில் தாங்கி யாதவர்களைக் காக்கின்றான். ராஸ நடனம், ராஸ லீலை இப்படி ஒவ்வொன்றையுமே உமா தொடுத்துள்ள விதம் மிகவும் அற்புதம். ஊடலுக்குப் பின் வரும் கூடல் தித்திக்கும் என்பதை கண்ணன் கோபியருக்கு விளக்கும் விதமே தனி. இப்படி இவ்வளவு அற்புதங்களையும் செய்துவிட்ட பிறகு துவங்குகிறது கண்ணன் அவதாரம் செய்ததின் நோக்கம். முதலில் கம்சன், பின்பு ஜராசந்தன், காலயவனன் என வதம் செய்து பூமாதேவின் பாரத்தைக் குறைக்கத் துவங்குகின்றான். இதனிடையே மலர்கிறது ருக்மணியின் காதல். பின் திரும்பவும் சிசுபாலன், பாணாசுரன் இவர்களின் வதம். முடிவாக குருக்ஷேத்திரப் போர். இப்படி கிருஷ்ணனின் அவதார நோக்கமும் நிறைவு பெறுகிறது.

இந்தப் புத்தகத்தின் சிறப்பாக நான் கருதுவது என்னவென்றால் இதன் எளிமையும், அழகுக் கோர்வையும் தான். முந்நூற்றி முப்பத்தாறே பக்கங்களில் பகவானின் அவதாரப் பெருமைகளை மிக எளிமையான மொழியில் தொடுத்துள்ள உமாவுக்கு மனமார்ந்தப் பாராட்டுக்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை இடை இடையே சொல்லப்பட்ட சிறு கதைகள் பாகவதத்திற்கே சுவை கூட்டுகின்றன. தேவயானி-யயதி, கஜேந்திர மோக்ஷம், பரதனின் கதை, தக்ஷனின் கதை, உத்தவ கீதை இப்படி ஒவ்வொன்றுமே எவரும் விரும்பும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் என் மனதை மிகவும் கவர்ந்தது, குசேலர் என்னும் சுதாமாவின் கதை. இறைவன் எவ்வளவு பெரிய மனதுடையவன், எவ்வளவு சிறிய பொருளையும் நாம் அன்புடன் கொடுத்தால் அதை மனதார ஏற்றுக்கொண்டு நமக்கு பலமடங்கு நன்மையைத் தருவான் என்பதைப் படிக்கும் போது மெய்சிலிர்க்கிறது.

இப்புத்தகம் இன்றைய இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் வெளிவந்துள்ளது. முதலில் சொன்ன மாதிரி ஷிட்னீ ஷெல்டனோ, டாவின்ஸி கோடோ நன்றாகத்தான் இருக்கும்; ஆனால் நம் பாரம்பரியத்தைப் போற்றும் பாகவதம், ராமாயணம் போன்ற பாரத மகாகாவியங்களும், தமிழ்ப் பெருங்காவியங்களும் அதைவிடப் பன்மடங்கு இனிமையைத் கொண்டுள்ளன. புத்தகத்தின் விலையோ ரூ.150/- தான். வாங்கிப் படித்துத் தான் பாருங்களேன்!

No comments: